சான் ஓசே: கலிஃபோர்னியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் இபிஎஸ் ‘யாதும் ஊரே’ என்ற முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு அழைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
“இந்தியாவின் நுழைவு வாயிலாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் 46 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் உயர்கல்வி படித்தவர்கள். திறமைக்கும் அறிவுக்கும் உழைப்புக்கும் பெயர் பெற்றவர்கள் தமிழர்கள். தமிழ்நாட்டில் உள்ள கல்வி வசதியின் மூலம் கற்ற தமிழர்கள் உலகெங்கும் வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்றுத் திகழ்வது மகிழ்ச்சிக்குரியது.
தமிழ்நாட்டில் உற்பத்தியைப் பெருக்க, உலகத் தமிழர்கள் முதலீடு செய்ய முன் வரவேண்டும். தொழிற்துறையில் இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஆனால், சிறு தொழில்களில் இந்தியாவின் முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமை பெற்றுள்ளது.
சிறு தொழில்கள் மூலம் ஏராளாமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. எனவே, பெரிய மூலதனம் இல்லாமல், சிறு தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கும் தமிழக அரசு துணையாக இருக்கும். “யாதும் ஊரே” என்றத் திட்டத்தின் மூலம் ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நீங்களும், தொழில் தொடங்க ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களையும் ‘யாதும் ஊரே’ திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்.
சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது கையெழுத்திட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடாக பெற்றுள்ளது. இவற்றில் இதுவரை 220 நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் துறைக்கு தமிழ்நாட்டில் இது வசந்த காலம் என்பதற்கு வேறு சான்று வேண்டுமா?.
உலகெங்கும் சிறப்புடன் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன்.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு,
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
என்று முழங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வழியில் இன்று நாம் இணைந்திருக்கிறோம். இந்நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு பொன்னாளாக, புதிய துவக்கமாக அமைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்று நாம் இங்கு தொடங்கும் புதிய முயற்சி உங்கள் அன்போடும், ஆதரவோடும் தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
உற்றதுணையாக மாண்புமிகு அம்மாவின் அரசும் இருக்கும் என உறுதியளிக்கும். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள், வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன்,” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழ்நாடு அரசு சிறப்பு அழைப்பின் பெயரில்இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக் அமெரிக்க பிரதிநிதி தோப்புத்துறை முனைவர்அ.முகம்மது நூர்தீன் கலந்து கொண்டு சிறப்பு செய்கிறார்கள்.
நிகழ்ச்சிகளை இந்திய தூதரக அலுவலக அதிகாரியின் பார்வையில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம், தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பு அதிமுகவின்அமெரிக்கா அம்மா பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மதுரை அபுகான் அவர்கள் அனைத்துசமுதாய, சமூக தமிழ் மக்களை ஒன்றுக்கூட்டி சிறப்பிக்கிறர்கள்.
கலிஃபோர்னியாவில் பேசிய முதல்வர், ஒப்பந்தம் செய்த 304 நிறுவனங்களில் 220 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளர்கள் என்று கூறியுள்ளது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்லும் வகையிலும் அமைந்துள்ளது.
வியாழக்கிழமை, கலிஃபோர்னியாவின் முக்கிய நிறுவனங்களுக்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார்.
வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் சென்று, அங்கிருந்து துபாய் புறப்பட்டுச் செல்கிறார்கள்.
– சான் ஓசே அரங்கிலிருந்து நேரடி ரிப்போர்ட் தோப்புத்துறை முனைவர்அ.முகம்மது நூர்தீன்